129 பக்கங்களில் தீர்ப்பு; ‘ஹிஜாப்’ வழக்கில் கேள்வி எழுப்பி பதில் அளித்த ஐகோர்ட்டு
ஹிஜாப் வழக்கில் 129 பக்கங்களுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட்டு கேள்விகளை எழுப்பியதுடன், அதற்கு பதிலும் அளித்துள்ளது.;
பெங்களூரு:
129 பக்கங்களில் தீர்ப்பு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு 129 பக்கங்கள் கொண்டவை ஆகும். ஆனால் நேற்று தீர்ப்பை வாசித்த நீதிபதி ரிதுராஜ் அஸ்வதி முக்கிய அம்சங்களை மட்டுமே எடுத்துக் கூறினார்.
தீர்ப்பில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தனிநபர் சுதந்திரம்
1. இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத வழக்கமா?, அதற்கு அரசியல் சாசனம் அட்டவணை 25-வது பிரிவு பாதுகாப்பு வழங்குகிறதா?.
2. சீருடை, மாணவிகளின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமையை மீறுகிறதா?.
3. சீருடை விதிகள் நிர்ணய விஷயத்தில் மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பிறப்பித்த உத்தரவு சரியானது இல்லையா?.
இந்த 3 கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்கிறோம்.
அதாவது, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத வழக்கம் அல்ல, சீருடை குறித்த அரசின் முடிவு ஒரு நியாயமான கட்டுப்பாடு ஆகும். மாணவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது.
மனுக்கள் தள்ளுபடி
சீருடை குறித்து உத்தரவிட அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த உத்தரவு செல்லாது என்று சொல்லும் வகையில் மனுதாரர்கள் எந்த அம்சங்களையும் இந்த கோர்ட்டில் எடுத்து கூறவில்லை. அதனால் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.
ஹிஜாப் குறித்து குழப்பமான நிலையை ஏற்படுத்த சில சக்திகள் சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் சமூக மோதல் பிரச்சினைகளை ஏற்படுத்தின.
வியப்பை ஏற்படுத்துகிறது
உடுப்பியில் அஷ்ட மட சம்பிரதாய விழா கொண்டாடப்படுகிறது. அதில் முஸ்லிம்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கல்வி ஆண்டின் பாதியில் இப்படி திடீரென ஹிஜாப் விவகாரம் எழுந்தது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.