திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருவையாறு:-
திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
7 மாதங்களுக்கு முன்பு திருமணம்
தஞ்சை மாவட்டம் திருவையாறு கீழமடவிளாகத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திகேயன் (வயது35). இவருடைய மனைவி ரேவதி (30). இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கார்த்திகேயன் வெல்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற அவர், மதியம் திருவையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருவையாறு அருகே கண்டியூர் குடமுருட்டி ஆற்றுப்பாலம் பகுதியில் வந்தபோது திருவையாறில் இருந்து குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு தஞ்சை நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சம்பவ இடத்தில் பலி
இந்த விபத்தில் கார்த்திகேயன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அப்பர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திகேயன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆன நிலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.