கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சாமி கோவில் குண்டம் திருவிழா; பூசாரி மட்டுமே தீ மிதித்தார்
கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார்.
தாளவாடி
கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சாமி கோவில் குண்டம் விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார்.
மல்லிகார்ஜூனா சாமி கோவில்
தாளவாடியை அடுத்துள்ள கொங்கள்ளி என்ற வனப்பகுதியில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் மல்லிகார்ஜூனா சாமி கோவில் அமைந்துள்ளது.
லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இந்த கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் ஆண்டுதோறும் குண்டம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
பூசாரி மட்டுமே இறங்கினார்
அதன்படி நேற்று முன்தினம் மாலை ருத்திராபிஷேக பூஜையுடன் குண்டம் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேள தாளத்துடன் சாமியின் ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் 2 கிலோ மீட்டர் தூரத்திலேயே பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாறை குகையில் சுயம்புவாக உள்ள லிங்கத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மல்லிகார்ஜூனா சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு இடையே பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார்.
தொட்டு வணங்கினர்
பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது இந்த கோவிலின் ஐதீகம். இதனால் ஆண் பக்தர்கள் பலரும் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார்ஜூனா சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து முனிவர் அவதாரத்தில் வந்த சாமியை ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தவனத்தோப்பில் பெண் பக்தர்கள் வந்து வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
போலீஸ் ஏட்டு மீது கல்வீச்சு
குண்டம் விழாவை தொடர்ந்து, இரவில் கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பங்களாப்புதூர் போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் என்பவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாலசுப்பிரமணியத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
------------