காரை உடைத்து சேதப்படுத்தியதாக 3 வாலிபர்கள் கைது

பனமரத்துப்பட்டியில் காரை உடைத்து சேதப்படுத்தியதாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து போலீஸ் வாகனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-15 20:40 GMT
பனமரத்துப்பட்டி:-
பனமரத்துப்பட்டியில் காரை உடைத்து சேதப்படுத்தியதாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து போலீஸ் வாகனத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் சேதம்
பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று மணிகண்டனின் மனைவி மல்லிகா (வயது 28) பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கடந்த 11-ந் தேதி காலை திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் என் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் எங்கள் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டனர். மேலும் அவர்கள் என்னையும், என் கணவரையும் கொன்று விடுவதாக மிரட்டினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
3 பேர் கைது
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த தீனதயாளன் (26), ஆனந்த் (22), பிரபு (20) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்வதற்காக பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு வாகனத்தில் ஏற்றினார்கள்.
அப்போது அங்கு வந்த 3 பேரின் உறவினர்கள் அவர்களை கைது செய்யக்கூடாது, விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அவர்கள்  சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்