பள்ளி வேன் மீது கார் மோதல்; மாணவ-மாணவிகள் 13 பேர் காயம்
புத்திரகவுண்டன்பாளையத்தில் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் மாணவமாணவிகள் 13 பேர் காயம் அடைந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்:-
புத்திரகவுண்டன்பாளையத்தில் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் மாணவ-மாணவிகள் 13 பேர் காயம் அடைந்தனர்.
வேன் மீது கார் மோதியது
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு வேனிலும் மாணவ-மாணவிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும் ஒரு வேன் 13 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த வேன் ஆத்தூர்-சேலம் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த கார் திடீரென்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் பின்பகுதியும், காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
13 பேர் காயம்
மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவ-மாணவிகள் 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கவியரசன் (வயது 10), ரூவிதா (13), சஞ்ஜய் (15), கரிகாலன் (13), நதி (12) ஆகிய 5 பேர் மட்டும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காரை ஓட்டி வந்தவர், பள்ளி வேன் மீது மோதியதும், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்து நேற்று மாலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.