குருகுல கல்வி காலத்தில் இருந்தே சீருடை முறை உள்ளது; கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
குருகுல கல்வி காலத்தில் இருந்தே சீருடை முறை உள்ளதாக ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
பெங்களூரு:
பள்ளி படிப்பு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இஸ்லாம் மத நம்பிக்கையில் ஹிஜாப் அத்தியாவசியமாக அணியப்படுகிறது என்பதற்கு உரிய ஆதாரங்களை மனுதாரர்கள் தரப்பு வழங்கவில்லை. அந்த மதத்தின்படி ஹிஜாப் அணியாதவர்கள் பாவிகளாக கருதப்படுவது இல்லை. இஸ்லாம் தனது புகழை இழப்பது இல்லை, அந்த மதத்தை சேர்ந்தவராக நீடிப்பதை தடுப்பது இல்லை. ஆசிரியர்கள், கல்வி மற்றும் சீருடை இல்லாமல் பள்ளி படிப்பு என்ற கருத்து முழுமை பெறாது.
ஆட்சேபிக்க முடியாது
சீருடை அணிய வேண்டும் என்பது நியாயமான கட்டுப்பாடு தான். இது அரசுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரம். இதை மாணவர்கள் ஆட்சேபிக்க முடியாது. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சீருடை நடைமுறை இருக்கவில்லை. ஆனால் பழமையான குருகுல கல்வி காலத்தில் இருந்தே இந்த சீருடை அணியும் முறை அமலில் உள்ளது. சீருடை குறித்து கன்னடத்தில் சமவஸ்திர, சமஸ்கிருதத்தில் சுப்ரேவேஸ் மற்றும் ஆங்கிலத்தில் ‘ஈக்வலண்ட்’ போன்ற வார்த்தைகள் பல்வேறு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதித்தால் அது, ஹிஜாப்புடனும் அல்லது ஹிஜாப் இல்லாமலும் என 2 வகையான மாணவிகள் வகுப்பில் இருப்பதை அனுமதிப்பதாக ஆகிவிடும். 2 வகையான மாணவிகள் இருப்பது, சமூக பிரித்தலை அனுமதிக்கிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. இதை முறைப்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவது தான். அங்கு பிளவு தன்மைக்கு இடம் கிடையாது. அதனால் மாணவர்கள் சீருடை விதிகளை பின்பற்றுவது கட்டாயம்.
அதிகாரம் உள்ளது
அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆடைகளை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்த மாணவிகளை அனுமதிக்காமல் தடுத்த சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் முதல்வர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.