‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்படாத குடிநீர் தொட்டி
கோபி எஸ்.டி.என். காலனி வீதியில் புதியதாக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அந்த குடிநீர் தொட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் யாருக்கும் பயன்படாமல் குடிநீர் தொட்டி உள்ளது. மேலும் இந்த தொட்டியில் தண்ணீர் ஏற்ற மின் இணைப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே பயன்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சிவகிரி அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் இடம் முட்புதர் மண்டி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த சாக்கடை கால்வாய் வழியாகத்தான் சிவகிரி, நெசவாளர் காலனி மற்றும் பாலமேடு புதூர் பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கழிவுநீரும் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் ஒரு கோவிலும் உள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரி தேங்கி உள்ள கழிவுநீர் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சிவகிரி.
ஆபத்தான குழி
ஈரோடு ரங்கம்பாளையத்தை அடுத்த ஜீவா நகர் அருகே போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக போடப்பட்ட தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூடி பகுதி உடைந்து ஆபத்தான குழியாக மாறி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சிலர் விபத்துகள் ஏற்படாத வகையில் கல் மற்றும் மரக்குச்சிகளை வைத்து உள்ளனர். இரவு நேரத்தில் இது தெரியாமல் பலரும் விபத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே ஆபத்தான குழியை சரிசெய்ய வேண்டும்.
பழனிச்சாமி, ஈரோடு.
பழுதடைந்த மின் கம்பம்
கோபி பஸ் நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து பழுதடைந்து காணப்படுகிறது. பழுதடைந்த மின் கம்பத்தை சீர் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
உடைந்த சாக்கடை மூடி
ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய குட்டை வீதி குண்டும்- குழியுமாக உள்ளது. மேலும் இந்த ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியவில்லை. மேலும் இந்த வீதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதை சரிசெய்யவேண்டும்.
ராமன், ஈரோடு.
ரோட்டில் குழி
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் சங்கராபாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சாியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி ரோட்டில் உள்ள குழியை மூட நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ரகுபதி, அந்தியூர்.