மோட்டார்சைக்கிளை உடைத்த வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-03-15 20:25 GMT
கடையநல்லூர்:
கடையநல்லூர் பெரிய தெருவை சேர்ந்த ஜபருல்லா மகன் சுலைமான் சேட் (வயது 28), கலந்த மஸ்தான் தெருவை சேர்ந்த மைதீன் பிள்ளை முகமது தாபித் (28), ஆலிம்சா தெருவைச் சேர்ந்த முஹம்மது பாரூக் மகன் முஹம்மது காலித் (28), அதே பகுதியை சேர்ந்த செய்யது மசூத் மகன் நிஹால் (26). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், கடையநல்லூர் வானவர் தெருவை சேர்ந்த பசூலுத்தீன் மகன் அப்துல்காதர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தெருவில் நிறுத்தி வைத்தார். அப்போது நள்ளிரவில் அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் உடைத்தனர். இதனை கண்டித்த அப்துல்காதருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு தென்காசி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு அனுராதா விசாரித்து, மோட்டார் சைக்கிள் உடைப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் வேல்சாமி வாதாடினார்.

மேலும் செய்திகள்