2 இடங்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை

விருதுநகர்-சாத்தூர் இடையே 2 இடங்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-03-15 20:12 GMT
விருதுநகர், 
விருதுநகர்-சாத்தூர் இடையே 2 இடங்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
 நடைமேம்பாலம் 
விருதுநகர் - சாத்தூர் இடையே கலெக்டர் அலுவலகம் முன்பும், படந்தால் விலக்கு அருகிலும் நடைமேம்பாலம் அமைப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சி காலத்தில் தலா ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 அப்போது எம்.பி.யாக இருந்த மாணிக்கம் தாகூர் இந்த நடை மேம்பாலத்திற்கானஅடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய தரைவழிப்போக்குவரத்து இணை மந்திரியாக பொன் ராதாகிருஷ்ணன் இருந்தபோது அவரிடம் இதுபற்றி வலியுறுத்தி கூறியபோது அவர் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தேசியநெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் திட்ட பணி தொடங்க நடவடிக்கை எடுக்கவில்ைல. 
திட்டப்பணி 
இதனைதொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மத்திய தரைவழிப்போக்குவரத்து இணை மந்திரிவி.கே.சிங் விருதுநகர் வந்திருந்த போது அவரிடம் இப்பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டிய போது அவரது நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். ஆனாலும் திட்டப்பணி தொடங்குவதற்கான முகாந்திரம் ஏதும் தெரியவில்லை. 
இந்தநிலையில் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஏற்படுத்துவதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் மதிவாணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- விருதுநகர்-சாத்தூர் இடையே கலெக்டர் அலுவலகம் மற்றும் படந்தால் விலக்கில் நான்கு வழிச்சாலையில் நடை மேம்பாலம் அமைக்கும் திட்டம் மாற்றப்பட்டு தற்போது மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரைபடம் 
 அதன்படி கலெக்டர் அலுவலகம் முன்பும் படந்தால் விலக்கிலும் மேம்பாலம் அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையில் இந்த இடத்தில் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 
மேம்பாலம் அமைக்கும் பணி மேலும் தாமதமாகாமல் அதனை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்