ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டர் அலுவலகம் முன் காளைகளுடன் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டர் அலுவலகம் முன் காளைகளுடன் போராட்டம் நடந்தது.

Update: 2022-03-15 20:04 GMT
பெரம்பலூர்:

போராட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி, கண்ணப்பாடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, அன்னமங்கலம், சில்லக்குடி, அரசலூர், பாடாலூர் பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேற்று தாங்கள் பராமரித்து வரும் காளைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும்வரை கலெக்டர் அலுவலகம் முன்பே சமைத்து சாப்பிட்டு எங்களது போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி கியாஸ் சிலிண்டர் மற்றும் சமையல் பாத்திரங்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் அபுசேட் தலைமை தாங்கினார். பெரியம்மாபாளையம் கஜேந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் காளைகளை வரிசையாக மரத்தில் கட்டி வைத்திருந்தனர்.
கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் கடந்த 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் அதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றதை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பொது சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் பகுதியை பார்வையிட்டு தடையின்மை சான்று வழங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், ஏற்கனவே வாடிவாசலை ஜல்லிக்கட்டு நடத்துவோர் பதிவு செய்து அதற்குரிய கட்டணம் மற்றும் மேடை, நாற்காலிகள், சவுக்கு கட்டைகள், தடுப்புகள் ஆகியவற்றுக்கு வாடகை செலுத்தி வந்துள்ளதால் அதிக அளவில் செலவாகியுள்ளதால் ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்திட அனுமதி வழங்கக்கோரியும் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், டவுன் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தாசில்தார்கள் கிருஷ்ணராஜ், சரவணன் (வேப்பந்தட்டை) மற்றும் போலீசார் 2 கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடமும் போலீசார் கலந்தாலோசனை செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
இதையடுத்து விசுவக்குடியில் வருகிற 26-ந்தேதியும், கள்ளப்பட்டியில் 30-ந் தேதியும், அன்னமங்கலத்தில் ஏப்ரல் 3-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளுமாறு அனுமதித்து போராட்டக் குழுவினரிடம் போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டக்குழுவினர் மதியம் 2 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்