நெல்லையில் மிகப்பெரிய கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
நெல்லையில் மிகப்பெரிய கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
நெல்லை:
நெல்லையில் மிகப்பெரிய கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தீவன தொழில்நுட்ப மையம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் கோழி தீவன தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழா மற்றும் கால்நடைகளுக்கான நவீன தீவன தொழில்நுட்ப கருத்தரங்கம் ஆகியவை நெல்லை ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் பழனிசாமி வரவேற்று பேசினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் திட்ட விளக்க உரையாற்றினார். சபாநாயகர் அப்பாவு கருத்தரங்கை தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்டு பேசினார்.
அமைச்சர் திறந்து வைத்தார்
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை தீவன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாட்டு இன கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நாட்டு இன நாய்கள், மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவற்றை மக்கள் நன்றாக வளர்க்க வேண்டும். பராமரிக்க வேண்டும்.
மிகப்பெரிய கோழிப்பண்ணை
மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் பசுந்தீவன புற்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவன உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு அதை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக கால்நடை சந்தைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டுக்கோழி தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் கோழிப்பண்ணை அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எனவே இங்கு கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நடவடிக்கைகள்
மத்திய அரசு மீனவர்களுக்கு தேவையான நிதியை தர வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் பேசியுள்ளேன். தமிழகத்தில் பிடிக்கின்ற மீன்களை தமிழகத்திலேயே சந்தைப்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் சமச்சீரான வளர்ச்சி வேண்டும் என்று முதல்-அமைச்சர் திட்டம் தீட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தோனேசியாவில் பிடிபட்ட தமிழக மீனவர்களை மீட்க பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும், அந்த நாட்டு தூதரகத்திற்கும் முதல்-அமைச்சர் கடிதம் எழுதி அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மீனவர்கள் சர்வதேச கடலில் எல்கையை கண்டுபிடிப்பதற்காக அவர்களுக்கு தேவையான கருவிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. பசு, எருமை மாடுகளை அதிக அளவில் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை டாக்டர்களை தேவையான அளவு நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.
ஆய்வு
முன்னதாக, கால்நடை மருத்துவக்கல்லூரியில் உள்ள குளிர்ப்பதன கிடங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், ரூபி மனோகரன், சண்முகையா, மாநகராட்சி மேயர் சரவணன், முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த், ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட், டாக்டர்கள் ராம்பிரபு, இனிகோ, தாசில்தார் சண்முகசுப்பிரமணியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், மகேஷ்குமார், பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.