தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதியம் நிலுவைத் தொகையை வழங்ககோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ளாட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-15 19:45 GMT
கறம்பக்குடி
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என சுமார் 250 உள்ளாட்சி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.
 அந்தவகையில் சில ஊராட்சிகளில் 6 மாதம் முதல் 36 மாதங்கள் வரை ஊதிய நிலுவைத்தொகை உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து உள்ளாட்சி தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
காத்திருப்பு போராட்டம்
 இதனால், விரக்தி அடைந்த உள்ளாட்சி தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் நேற்று மாலை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர்களை அவமானப்படுத்திய அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலர்கள் பணி முடிந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் அவர்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இரவு நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் தொழிலாளர்கள் சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் நீடித்தது.  

மேலும் செய்திகள்