வேலகவுண்டம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வேலகவுண்டம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (47). இவர் தனது இளைய மகள் ஹேமாவதியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலட்சுமி கடந்த 7-ந் தேதி மொளசி அருகே உள்ள தேவம்பாளையத்தில் இருக்கும் தனது சித்தி அருக்காணி வீட்டிற்கு பண்டிகைக்காக தனது இளைய மகள் ஹேமாவதியுடன் சென்றிருந்தார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க பூட்டு மற்றும் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க செயின், 3 பவுன் நெக்லஸ், 6 பவுன் ஆரம் மற்றும் 4 பவுன் வளையல் உள்பட மொத்தம் 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துலட்சுமி நேற்று முன்தினம் இரவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.