ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் தங்கவேலு, மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
மருத்துவ காப்பீட்டுக்கு மாதந்தோறும் தலா ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 200 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியாக மாதம் ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், மொத்தமுள்ள ஓய்வூதியர்களில் 10 சதவீதம் கூட மருத்துவ காப்பீட்டு மூலம் பயன் அடைவது கிடையாது. எனவே ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.