ரெயில் மோதி வாலிபர் சாவு

மார்த்தாண்டம் அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் ரெயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து கை துண்டானது.

Update: 2022-03-15 18:32 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் ரெயிலில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து கை துண்டானது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வாலிபர் பிணம் 
மார்த்தாண்டம் அருகே உள்ள பாளையங்கட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நேற்று காலையில் தண்டவாளத்தையொட்டி ஒரு வாலிபரின் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியினர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் (வயது30), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவர் டிப்ளமோ படித்துள்ளார். எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை ெசய்து வந்தார்.
மனைவி-குழந்தை
காதலித்து திருமணம் செய்த இவருக்கு பிளஸ்சி என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில், நேற்று காலையில் ஜெபராஜ் பாளையங்கட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் தாசன் (75). இவர் நேற்று குழித்துறை ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து திருவனந்தபுரம்-திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது, ரெயில் ஓடி கொண்டிருந்ததால் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் நடைபாதை இடையே சிக்கி அவரது வலது கை துண்டானது.
அவரை ரெயில்வே போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்  அனுப்பி வைத்தனர். இதுகுறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்