பெண்ணை கொன்று கணவர் தற்கொலை செய்த விவகாரம்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமே கொலைக்கு காரணம்
நாகர்கோவிலில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனைவியை கொன்று தற்கொலை
நாகர்கோவில் கோட்டார் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கேசவன் மனைவி வனஜா (வயது32). இவர்களுக்கு மஞ்சு (13), அக்ஷரா (12) என்ற 2 மகள்கள் உண்டு. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனஜா அவரை விட்டு பிரிந்து குளச்சலை சேர்ந்த மீனவர் ஜோஸ் கான்பியர் (47) என்பவரை 2-வதாக மணந்து கொண்டார். இவர்கள் தற்போது நாகர்கோவில் செட்டிதெருவில் வசித்து வந்தனர். ஜோஸ் கான்பியருக்கும், வனஜாவுக்கும் குழந்தைகள் இல்லை. எனினும் வனஜாவின் 2 மகள்களையும் தன் மகள்களாகவே ஜோஸ் கான்பியர் பாவித்து வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் ஜோஸ் கான்பியர் வீட்டில் நெஞ்சை பதற வைக்கும் பயங்கர சம்பவம் அரங்கேறியது. அதாவது ஜோஸ் கான்பியர், தனது மனைவி வனஜாவை கொன்று கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டார். அதோடு குழந்தைகள் இருவரின் கை, கால்களை கட்டி, கூச்சலிட முடியாதபடி வாயையும் கட்டிவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வனஜா கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையிலும் அழுகிய தாயார் பிணத்தோடு குழந்தைகள் தவித்தன.
கொலை செய்ய முயற்சி
இதற்கிடையே மூத்தமகள் மஞ்சு எப்படியோ தப்பித்து வெளியே வந்ததால் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் அனைத்தும் போலீசுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் தவித்த 2 குழந்தைகளையும் மீட்டனர். அப்போது மஞ்சு கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட லேசான காயம் இருந்ததை போலீசார் பார்த்தனர். வனஜாவை கொலை செய்த ஜோஸ் கான்பியர், மஞ்சுவையும் கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மஞ்சுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி நடத்தையில் சந்தேகம்
முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் வனஜாவை, ஜோஸ் கான்பியர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதாவது வனஜாவை திருமணம் செய்து விட்டு ஜோஸ் கான்பியர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். வெளிநாட்டில் இருந்து மனைவியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றால் பெரும்பாலான நேரங்களில் அவரது செல்போன் பிசியாகவே இருந்துள்ளது.
பல நாட்களாக இதே நிலை நீடித்ததால் மனைவி மீது ஜோஸ் கான்பியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் ஜோஸ் கான்பியர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். பின்னர் மனைவியின் நடவடிக்கைகளை அவருக்கு தெரியாமலேயே ரகசியமாக கவனித்து வந்தார். அப்போது வனஜா அடிக்கடி செல்போனில் பேசுவதை அவர் பார்த்துள்ளார்.
குடும்ப தகராறு
இதுதொடர்பாக கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது.
சம்பவத்தன்று வனஜா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து ஜோஸ் கான்பியர் மனைவியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. மதியத்துக்கு பிறகு வீட்டுக்கு வந்த ஜோஸ் கான்பியர் இதுபற்றி மனைவியிடம் கேட்டு உள்ளார். ஆனால் வனஜா சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ் கான்பியர் மனைவி வனஜாவை கொடூரமாக கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
இதற்கிடையே ஜோஸ் கான்பியர் மற்றும் வனஜா ஆகியோரின் உடல்கள் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.