ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 34 பேர் காயம்

மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-03-15 18:24 GMT
மணப்பாறை, மார்ச்.16-
மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டில்  காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி  தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற காளைகள் டோக்கன்முறைப்படி ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து களத்தில் நின்று ஆட்டம் காட்டியது. இதில் சில காளைகளை வீரர்கள் பிடித்தனர். பல காளைகள் பிடிபடாமல் பரிசுகளை அள்ளி சென்றன.  வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், மிக்சி, மின்விசிறி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
34 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் 669 காளைகளும், 217 வீரர்களும் களம் கண்டனர். காளைகள் முட்டித் தள்ளியதில் 34 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 15 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டில் பழனியாண்டி எம்.எல்.ஏ. பெயரில் ஒரு காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக வெளியே வந்த காளையை ஒரு காளையர் அடக்க முயன்ற போது அவரை கொம்பால் தூக்கி வீசியது. இதனால் மேலும் ஆக்ரோஷம் அடைந்த காளை களத்தையே கலங்கடித்தது. இருப்பினும் மற்றொரு வீரர் காளையை அடக்க அதன் திமிலை இறுகப் பற்றிப் பிடித்தார். ஆனால் ஒரு சுற்றில் அந்த வீரரையும் தூக்கி வீசி கொம்பால் பந்தாடியது. அதன் பின்னர் காளையின் அருகில் வீரர்கள் செல்ல தயங்கினர். இதனால் அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் திருச்சியில் இருந்த வந்திருந்த ஒரு காளையின் பெயரை சொன்னதும் வீரர்கள் அனைவரும் வாடிவாசல் அருகே மேலே ஏறிக் கொண்டனர். ஆக்ரோஷமாக வந்த காளை வீரர்களை நெருங்க விடாமல் ஜல்லிக்கட்டு திடலில் இருந்து சென்றது.

மேலும் செய்திகள்