திருவிடைமருதூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜினாமா கூட்டத்தின்போது தலைவரிடம் கடிதம் வழங்கியதால் பரபரப்பு
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, துணைத் தலைவர் கருணாநிதி தனது ராஜினாமா கடிதத்தை ஒன்றியக்குழு தலைவரிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவிடைமருதூர்:-
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, துணைத் தலைவர் கருணாநிதி தனது ராஜினாமா கடிதத்தை ஒன்றியக்குழு தலைவரிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக சுபா திருநாவுக்கரசு பதவி வகித்து வருகிறார். துணைத் தலைவராக கொத்துக்கோவில் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி பதவி வகித்து வந்தார். இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
நேற்று ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது கூட்டத்துக்கு வந்த துணைத்தலைவர் கருணாநிதி, உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தார். அப்போது மற்ற உறுப்பினர்கள் துணைத் தலைவர் இருக்கையில் அமருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.
ராஜினாமா கடிதம்
பின்னர் சிறிது நேரம் கழித்து கருணாநிதி தன்னுடைய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை தலைவரிடம் வழங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், ‘நான் 35 ஆண்டு காலம் தி.மு.க.வில் உழைத்துள்ளேன். 5 ஆண்டுகாலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளேன். ஒன்றியக்குழு துணைத்தலைவராக கடந்த 2 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தபோது எனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குடும்ப சூழ்நிலையும், உடல்நிலையும் ஒத்துழைக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது குறித்து நான் கடந்த 7-ந் தேதியே முறைப்படி எம்.பி. உள்பட அனைவருக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன்’ என்றார்.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், துணைத் தலைவர் திடீரென இப்படி பேசியதையும், ராஜினாமா கடிதம் கொடுத்ததை கண்டு அதிர்ந்து அவருக்கு ஆறுதலாக பேசினர். கூட்டம் முடிவுற்றதும் கருணாநிதி உடனே வெளியில் புறப்பட்டு காரில் சென்று விட்டார்.
பதவிக்கு போட்டி
திருவிடைமருதூர் ஒன்றியக்குழு துணைத் தலைவராக கருணாநிதி போட்டியிட்ட போது, தி.மு.க.வைச் சேர்ந்த பத்மாவதி கிருஷ்ணராஜ் என்பவரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது தி.மு.க.வினர் சமரசம் செய்து இருவரும் தலா 2½ ஆண்டுகள் பொறுப்பு வகித்து கொள்ளுங்கள் என கூறினர். ஆனால் அவர்கள் கூறியபடி இன்னும் 2½ ஆண்டுகள் ஆகவில்லை.
இதுகுறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எனது உடல்நிலை சரியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம்’ என்றார்.