தக்கலை அருகே பஸ் மோதி தொழிலாளி பலி
தக்கலை அருகே மனைவி கண்ணெதிரே கேரள அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை,
தக்கலை அருகே மனைவி கண்ணெதிரே கேரள அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மகள் வீட்டுக்கு சென்று திரும்பியவர்
தக்கலை அருகே உள்ள விலவூர், புலயன்விளையை சேர்ந்தவர் டென்னிசன் (வயது58), கூலி தொழிலாளி. இவருக்கு லதா (55) என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொடுத்தார். மகளை பார்ப்பதற்காக டென்னிசனும், அவரது மனைவியும் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றனர்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு நேற்று காலையில் குமரிக்கு வந்தனர். அழகியமண்டபம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பஸ் மோதியது
அழகியமண்டபம் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது டென்னிசன் சாலையை கடந்து மறுபக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ் டென்னிசன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை சாலையின் மறுபுறம் நின்று பார்த்துக்கொண்டிருந்த மனைவி கதறி அழுதபடி ஓடி வந்தார்.
தொடர்ந்து பக்கத்தில் நின்றவர்களின் உதவியோடு கணவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டென்னிசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை, அதியனூரை சேர்ந்த சுரேஷ்குமாரை(55) கைது செய்தனர்.
மனைவி கண்ணெதிரே பஸ் மோதி கணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.