கங்காதர ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
ஆற்காடு
ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
ஆற்காடு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மூலவருக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மேலும் உற்சவ மூர்த்திகள் சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை பூத வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், ஆள் மேல் பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 9-வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். இதனையொட்டி தேருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
திருப்பணி குழு தலைவர் பொன்.கு. சரவணன் தலைமையில் ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் முன்னிலையில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், தொழிலதிபர் ஜே. லட்சுமணன் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
ஈஸ்வரன் கோவில் தெருவில் இருந்து புறப்பட்டு ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, தொல்காப்பியர் தெரு, புதிய வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, ஆரணி சாலை, வழியாக கோவில் வளாகத்தில் வந்து தேர் நிலை நின்றது. இதனைெயாட்டி, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க மின்சார தடை செய்யப்பட்டு தேர்,நிலைக்கு வந்தபின் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டது.
========