தற்போதைய பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி இளையான்குடியில் கடையடைப்பு

தற்போதைய பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது;

Update:2022-03-15 23:17 IST
இளையான்குடி, 

தற்போதைய பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி இளையான்குடியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 
புதிய பஸ் நிலையம் 
இளையான்குடி நகரின் மத்தியில் தற்போது பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. இந்த பஸ் நிலையம் மிகவும் குறுகிய இடத்தில் உள்ளதால் தற்போது பஸ்கள் உள்ளே சென்று திரும்பி வர முடியாத நிலை உள்ளது. இதையடுத்து இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து பல்வேறு வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக சிவகங்கை சாலையில் இடம் தேர்வு செய்து அதற்கான டெண்டர் விடும் பணியையும் தொடங்கி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இளையான்குடியில் இருந்து வெளிப்புறத்தில் பஸ் நிலையம் அமைத்தால் பல்வேறு வகையில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளதாக கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். 
கடையடைப்பு போராட்டம் 
இந்தநிலையில்  இளையான்குடி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ சங்கங்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கண்டனம் தெரிவித்து இளையான்குடி நகர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி சிவகங்கை சாலையில் அமைய இருக்கும் புதிய பஸ் நிலையத்தை தவிர்த்து பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள பயனற்ற பேரூராட்சி அலுவலகம், மருத்துவமனை வளாகம் போன்றவற்றை அப்புறப்படுத்தி புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடந்தது. 
இதையொட்டி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் ஓடவில்ைல. இதன் காரணமாக நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்