உப்பு உற்பத்திக்காக ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும் கடல் நீர்
உப்பு உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலம் கடல் நீர் கொண்டு செல்லப்படுகிறது.
சாயல்குடி,
வாலிநோக்கம் பகுதியில் அரசு உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலம் கடல் நீர் கொண்டு செல்லப்படுகிறது.
உப்பு உற்பத்தி தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, பனைக்குளம் நதிப்பாலம் உள்ளிட்ட ஊர்களில் உப்பள பாத்திகள் உள்ளன.
அதுபோல் மாவட்டத்திலேயே வாலிநோக்கம் பகுதியில்தான் அதிகப்படியான உப்பள பாத்திகள் உள்ளன. அதிலும் தமிழக அரசின் உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான ஏராளமான பல நூறு ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கோடை கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் பகுதியில் உள்ள தமிழக அரசின் உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் பணியானது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராட்சத குழாய்
உப்பு உற்பத்திக்காக வாலிநோக்கம் கடல் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீரானது மோட்டார் மூலம் பம்பிங் செய்து எடுத்து கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள இரவை நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் மீண்டும் அங்கிருந்து உப்பள பாத்திகளுக்கு கடல் நீரானது மோட்டார் மூலம் பம்பிங் செய்து கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு இரவை நிலையத்தில் இருந்து பாத்திகளுக்கு கொண்டு செல்லும் கடல் நீரானது அருவிபோல் விழுந்து பாத்திகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. உப்பு உற்பத்திக்காக பாத்திகளில் கொண்டு செல்லப்பட்ட கடல்நீரில் தொழிலாளர்கள் இறங்கி கடல்நீரை கலக்கி உப்பு உற்பத்தி செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாத்திகளில் உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் தமிழக அரசின் உப்பு நிறுவனத்திற்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கே உப்புக்களானது எந்திரம் மூலம் பொடியாக்கப்பட்டு பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யும் பணியும் நடக்கிறது.
தீவிரம்
வாலிநோக்கத்தில் உள்ள தமிழக அரசின் உப்பு நிறுவனத்திலிருந்து கல் உப்புகள் அரைத்து பாக்கெட்டுகளாகவும், கல் உப்பாகவும் நாகப்பட்டினம், மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல ஊர்களுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதைத் தவிர தனியார் பாத்திகளில் இருந்தும் ஏராளமான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகமான உப்பு உற்பத்தி செய்யக்கூடிய இடங்களில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.