எஸ்பிவேலுமணியின் உறவினருக்கு சொந்தமான நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
எஸ்பிவேலுமணியின் உறவினருக்கு சொந்தமான நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
திருப்பூர்,
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினருக்கு சொந்தமான நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி நெருக்கமானவர்களுக்கு, உறவினர்களுக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஸ்ரீமகா கணபதி ஜூவல்லரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை 7.30 மணி முதல் சோதனையை தொடங்கினார்கள். இந்த நகைக்கடை எஸ்.பி. வேலுமணியின் உறவினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
நகைக்கடையில் சோதனை
இந்த நகைக்கடையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை தொடங்கினார்கள். நகைக்கடையின் மேலாளர் மற்றும் முக்கிய ஊழியர்களை மட்டும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். காலை 9.30 மணிக்கு கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடைக்கு வந்தனர். ஆனால் கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் பூட்டப்பட்டு இருந்தது. கடைக்கு முன் காவலாளி நின்று ஊழியர்களிடம் விவரத்தை தெரிவித்ததும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நேற்று மாலை 5 மணிக்கு மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை தொடர்ந்தது. கடையில் இருப்பில் உள்ள நகைகளின் எடையளவு, விற்பனை செய்யப்பட்ட நகைகளின் எடையளவு, கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலையில் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினருக்கு நெருக்கமானவர் விஷ்ணுவர்த்தன் என்பவர் சென்னையில் குடியிருந்து வருகிறார். இவரது தந்தை ஜெயப்பிரகாஷ். இவர் போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீடு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் 2-வது காலனி விரிவாக்கம் பகுதியில் உள்ளது.இங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கியதாக தெரியவில்லை.