மோட்டார் சைக்கிளில் 10 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

உத்தமபாளையம் வழியாக கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் 10 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-15 17:02 GMT
தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தேனி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் நிறுத்தி அவர் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டனர். 

அதற்குள் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், போடி அருகே உள்ள போ.அணைக்கரைப்பட்டியை சேர்ந்த விஜய் (வயது 22) என்பதும், அந்த கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

 இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்