திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

ஆரூரா தியாகேசா பக்தி கோஷம் விண்ணதிர திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2022-03-15 17:01 GMT
திருவாரூர்;
ஆரூரா தியாகேசா பக்தி கோஷம் விண்ணதிர திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தியாகராஜர் கோவில்
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவிலின் சிறப்புக்கு மேலும் மணி மகுடமாக திகழ்வது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற பெருமையை ஆழித்தேர் பெற்று உள்ளது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். 
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு தியாகராஜர் அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தேர்களில் எழுந்தருளினர்.
ஆழித்தேரோட்டம்
தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேேராட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தேரடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்தனர். 
இதைத்தொடர்ந்து ஆழித்தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜை நடந்தது. காலை 8.10 மணிக்கு மங்கள இசையுடன் வாணவேடிக்கை முழங்க தேரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்ஆரூரா, தியாகேசா என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பினர். 
வடம் பிடித்து இழுத்தனர்
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவதேசிக பாரமாச்சாரிய சாமிகள், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பாரமாச்சாரிய சாமிகள், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் கவிதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், ஒன்றியக்குழு தலைவர் தேவா, நகரசபை உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில் ஆகியோர் தரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தேரின் பின்புறம் 2 புல்டோசர்கள் தேர் சக்கரங்களை முன்புறம் தள்ளி விட மெதுவாக சக்கரங்கள் சுழன்று நிலையை விட்டு ஆடி, அசைந்து புறப்பட்டது. 300 டன் எடையில் மிகவும் கம்பீரமாக காட்சி அளித்த ஆழித்தேர், திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த காட்சி காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது. தேரை இழுக்கும்போது பச்சை கொடியும், நிறுத்துவதற்கு சிவப்பு கொடியும் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு வழிகாட்டப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடந்தது. 
ஆழித்தேரின் பின்புறம் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருவாரூர் ஆழித்தேர் அழகை காண உள்ளுர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்து இருந்தனர். 
ஆழித்தேர் கீழவீதியில் தொடங்கி தெற்குவீதி, மேற்கு வீதி, வடக்கு வீதியில் மதியம் நிறுத்தப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கீழவீதி தேர் நிலையை அடைந்தது.
விழாக்கோலம் கண்ட நகரம்
திருவாரூர் நகராட்சி சார்பில் தேரோடும் நான்கு வீதிகளிலும் 270 துப்புரவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் தூய்மை பணிகள் மேற்ெகாள்ளப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி, தற்காலிக கழிவறை வசதி அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. 
தேருக்கு பின் மருத்துவக்குழுவுடன் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகிய வாகனங்கள் வந்தன. அழித்தேரோட்ட விழாவையொட்டி நேற்று திருவாரூர் நகர் முழுவதும் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருவாரூர் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. இரவு 7.50 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

மேலும் செய்திகள்