விளை நிலங்களில் உயிர் வேலிகள் அமைக்க வேண்டும்
விளை நிலங்களில் உயிர் வேலிகள் அமைக்க வேண்டும்
போடிப்பட்டி,
விளை நிலங்களில் உயிர் வேலிகள் அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லுயிர் பெருக்கம்
பயிர்களை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கும் விதமாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களைச் சுற்றி வேலி அமைப்பது வழக்கமாகும்.அந்தவகையில் இயற்கை முறையில் முள் செடிகள், பனை மரங்கள், கற்றாழை மற்றும் பலவகை மரங்களைக் கொண்டு வேலி அமைப்பார்கள்.
இத்தகைய வேலிகள் உயிர் வேலிகள் எனப்படும்.சமீப காலங்களாக இத்தகைய உயிர் வேலிகள் அமைப்பதற்குப் பதிலாக கம்பி வேலிகள் மற்றும் காம்பவுண்டு சுவர் அமைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
உயிர் வேலிகளின் முக்கியத்துவம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல்லுயிர்ப் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் உயிர் வேலிகளின் பங்கு முக்கியமானதாகும்.உயிர் வேலியில் கள்ளி, காட்டாமணக்கு, கிளுவை, பூவரசு, கற்றாழை போன்றவற்றை வளர்ப்பார்கள்.இதன் மீது பல்வேறு மூலிகை தாவரங்கள் படர்ந்து வளரும்.
இந்த வேலியில் பலவிதமான நன்மை தரும் பூச்சியினங்கள் வளரும்.அதேநேரத்தில் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக பூச்சிகளை உணவாகக் கொள்ளும் தவளை, ஓணான், குருவிகள் போன்றவையும் அந்த வேலியில் தஞ்சமடையும்.
அவற்றை மட்டுமல்லாமல் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளையும் மயில்கள் கட்டுக்குள் வைத்திருக்கும்.மயில்களின் பெருக்கத்தை குள்ளநரிகளும் காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தும்.
இவ்வாறு பல்லுயிர் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் உயிர் வேலிகள் பங்காற்றுகிறது.
மூலிகைச் செடிகள்
தற்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பல பாதிப்புகளுக்கு உயிர் வேலிகள் அழிப்பே காரணமாக இருக்கிறது. பூச்சிகளைக்கட்டுப்படுத்த தெளிக்கப்படும் ரசாயன மருந்துகளால் விளைபொருட்கள் விஷமாவதுடன் மண் மலடாகிறது.
மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து பயிர்களை சேதப்படுத்துவதைத் தவிர்க்க முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை, முடக்கத்தான், பிரண்டை போன்ற மூலிகைச் செடிகள் கிடைப்பது அரிதாகி விட்டது.தற்போது உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் மீண்டும் உயிர் வேலிகள் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மீண்டும் விவசாயிகள் இயற்கையை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது இயற்கை அவர்களுக்கு பலவிதமான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.