புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி தாக்குதல்
புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி அருகே உள்ள தாடிச்சேரியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 26). இவர், கோவையில் உள்ள மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கம்பத்தை சேர்ந்த பிரதீப்பின் தங்கை பிருந்தாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் பிரதீப், அவருடைய உறவினர்கள் அய்யணன், சுரேஷ் உள்பட 4 பேர் கோவைக்கு சென்று நவநீதகிருஷ்ணனை அடித்து உதைத்து காரில் ஏற்றி கம்பம் நோக்கி கடத்தி வந்தனர்.
வரும் வழியில் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில் மலைப்பாதைக்கு அழைத்து சென்று, நவநீதகிருஷ்ணனின் ஆடையை கழற்றி கம்பால் அடித்து மீண்டும் காரில் ஏற்றினர். அதன்பிறகு நவநீதகிருஷ்ணனை கம்பத்தில் விட்டு சென்று விட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த நவநீதகிருஷ்ணனுக்கு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.