விபத்துகளை தடுக்க சாலைஓரத்தில் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானா பகுதியில் சாலைஓரத்தில் நேற்று சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வாரந்தோறும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் நெடுஞ்சாலை, போக்குவரத்து, போலீஸ் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
அப்போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகள், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இந்த நிலையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை, விபத்து நடைபெறும் பகுதியின் அருகில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானா பகுதியில் சாலைஓரத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த ரவுண்டானா உள்பட பல இடங்களில் நடந்த சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை தடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ரவுண்டானா பகுதியில் மேற்கொள்ள வேண்டிய விபத்து தடுப்பு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் விசாகன், அங்கு வந்து ரவுண்டானாவில் விபத்து நடைபெறாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்தார்.