அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-15 16:40 GMT
தாராபுரம்:
தாராபுரம் அருகே வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் தொந்தரவு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தாசர்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உடுமலை காந்திபுரத்தை சார்ந்த முத்துபாண்டி மகன் மணிகண்டராஜ் (வயது 42) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் ஆன்லைன் வகுப்பு எடுப்பதாக கூறி செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.
பின்னர் அந்த மாணவிக்கு கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த  மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர்.
போக்சோவில் கைது
தலைமை ஆசிரியை வித்யா உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் அனுமதி பெற்று தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லம் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியிடம் விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் ஆசிரியர் மணிகண்டராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்