கோர்ட்டு மீது நம்பிக்கை இருந்தும் நியாயம் கிடைக்கவில்லை- ஹிஜாப் வழக்கு தொடர்ந்த மாணவிகள்

கோர்ட்டு மீது நம்பிக்கை இருந்தும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாணவிகள் கூறினர்

Update: 2022-03-15 16:23 GMT
உடுப்பி: கோர்ட்டு மீது  நம்பிக்கை இருந்தும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று ஹிஜாப் குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாணவிகள் கூறினர். 

ஹிஜாப் வழக்கு

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில் நேற்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து இவ்வழக்கை தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள் 5 பேர் உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் ஹிஜாப்பை கழற்ற மாட்டோம். பள்ளி, கல்லூரிகளில் நாங்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் ஆஜராக அனுமதிக்க வேண்டும். நாங்கள் ஹிஜாப் அணியாமல் கல்லூரிகளுக்கு செல்லமாட்டோம். கோர்ட்டு  மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இருப்பினும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. நாங்கள் சட்டரீதியில் எல்லா முயற்சிகளையும் செய்தோம். 

தேர்வு எழுத...

எங்களுக்கு ஹிஜாப் வேண்டும் என்ற காரணத்தால் நாங்கள் கோர்ட்டு படி ஏறினோம். ஏராளமான மாணவிகள் ஹிஜாப் காரணத்தால் வஞ்சிக்கிப்படுகிறார்கள். அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. 

எங்களுக்கு மத தர்மம் மற்றும் கல்வி இரண்டுமே முக்கியம். தேர்வு எழுத நாங்கள் தயாராக உள்ளோம். ஆனாலும் ஹிஜாப்பை கழற்ற மாட்டோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்