‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-15 16:11 GMT
சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் ‘பங்க்’ எதிரில் உள்ள மின் கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து உள்ளது. மேலும் இந்த மின்கம்பம் அருகிலுள்ள கடையின் மீது சரிந்தும், மின் வயர்கள் வெளியில் நீட்டிக்கொண்டும் இருக்கிறது. மின்கம்பத்தை சரி செய்ய மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நவீன் குமார், வளசரவாக்கம்.



உடனடி தீர்வு கிடைக்க வேண்டும்.

சென்னை ஓ.எம்.ஆர். சாலை ஏ-காடூர் சிறுசேரி சிப்காட் வளைவு எதிரில் வீராணம் ஏரியிலிருந்து வரும் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் தண்ணீர் ஒரே இடத்தில் சேர்வதால் அந்த இடமே சாக்கடையாக மாறி வருகிறது. இதனால் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே உடைந்த பைப்பை சரி செய்யவும் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

- சையது அப்துல் காதர், சமூக ஆர்வலர்.



சாலை சீரமைக்கப்படுமா?

சென்னை கொரட்டூர் வடக்கு சிவலிங்கபுரத்தில் சாலை பணி ஆரம்பிக்கப்பட்டு முழுமையடையாமல் இருக்கிறது. இந்த சாலையில் வெறும் ஜல்லிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் இப்பகுதியை கடந்து செல்வதற்கே சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி சறுக்கி கீழே விழுவது போன்ற விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- அஸ்வின் கார்த்திக், கொரட்டூர்.



குப்பைகள் குவிந்த பூங்கா

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அல்சா டவுன்ஸ் வில்லா பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த மூன்று மாதங்களாக குப்பைகள் சேர்ந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த பூங்காவை மாநகராட்சி ஊழியர்களும் துப்புறவு பணியாளர்களும் சரிவர பராமரிக்காததால் பார்ப்பதற்கே அலங்கோலமாக உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கும் பூங்காவை சரியாக பராமரிப்பதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

- ரவிகுமார், வளசரவாக்கம்.



பெயர் பலகை இல்லாத தெரு

சென்னை சூளைமேடு அண்ணா நெடும் பாதை தெருவின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேதமடைந்திருந்த பெயர் பலகையை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். ஆனால் இதுவரை புதிய பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இந்த தெருவிற்கு புதிதாக வருபவர்கள் பெயர் பலகை இல்லாததால் முகவரி தேடி அலைய வேண்டிய நிலையுள்ளது. எனவே உடனடியாக புதிய பெயர் பலகை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஈஸ்வரன், சூளைமேடு.

நிரம்பிய கழிவுநீர் தொட்டி

சென்னை மாதவரம் பால் நிறுவனத்துக்கு எதிரில் இருக்கும் ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இந்த கழிவுநீர் அங்கேயே தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது கடந்த 3 மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாரே செல்கிறார்கள். எனவே மாநகராட்சி இதை கவனித்து நிரந்தரமாக தீர்வு வழங்குமா?

- அறிவானந்தம், மாதவரம்.

பழுதடைந்த தெரு விளக்கு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மணவூர் பகுதியில் உள்ள தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் வேலை முடிந்து இரவு வீடு திரும்புவோர் மற்றும் கடைவீதிக்கு செல்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததால் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே தெரு விளக்கை சரி செய்து தர மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- கவி, மணவூர்.

நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டு சாலை அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் சிரமப்பட்டே பயணம் செய்கிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதால் மின் விளக்குகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.

நூலகம் கிடைக்குமா?

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பொது நூலக வசதி இல்லை. இப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், வாலிபர்கள், பெண்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுநூலகம் ஒன்றை அமைத்து தர அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

- ராஜேஷ், திருவள்ளூர்.

மேலும் செய்திகள்