பணிநீக்கம் செய்ததாக கூறி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

பணிநீக்கம் செய்ததாக கூறி தூய்மை பணியாளர்கள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-15 15:26 GMT
கோத்தகிரி

பணிநீக்கம் செய்ததாக கூறி தூய்மை பணியாளர்கள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூய்மை பணியாளர்கள்

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நிரந்தர சுகாதார பணியாளர்கள் 27 பேரும், தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50 பேரும் வேைல செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் அனைத்து இந்திய தூய்மை பணியாளர்கள் சுயமரியாதை சங்க ஆலோசனை கூட்டத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. 

எனவே முறையாக அனுமதி பெறாமல் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேரூராட்சி செயல் அதிகாரி விசாரணை நடத்த உள்ளதால், அதுவரை யாரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதார மேற்பார்வையாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

தர்ணா போராட்டம் 

இந்த நிலையில் தங்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக கூறி, தற்காலிக தூய்மை பணியாளர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் 2 மணிக்கு கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா மற்றும் தேர்தல் நேரத்தில் நாங்கள் சிறப்பாக பணிகளை மேற்கொண்டோம். ஆனால் தற்போது திடீரென்று எங்களை பணிநீக்கம் செய்து உள்ளது நியாயம் கிடையாது என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை 

இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் கோத்தகிரி போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். அதில் உங்கள் யாரையும் பணிநீக்கம் செய்வில்லை என்றும், விசாரணைக்கு பின்னர் பணிக்கு வரவேண்டும் என்றுதான் கூறி உள்ளதாக தெரிவித்தனர். 

இதனால் சமாதானம் அடைந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்