புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ11 கோடி கடன் உதவி:கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ11 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.11 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழில் முனைவோர்
தமிழக அரசு தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்திட்டம் மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் திட்டத்தில், திட்ட மதிப்பீட்டுத் தொகையை ரூ.5 கோடியாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழில்பயிற்சி ஆகிய கல்வி தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
தகுதிகள்
இந்த திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை. இந்த திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். பொதுபிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக10 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ரூ.11 கோடி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் 15 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.msmetamilnadu.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும். அவர்களது விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் இணையதளத்தில் சரிபார்க்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதொழில் முனைவோர்களுக்கு இதுவரை, 2021-2022-ம் நிதியாண்டில், 23 தொழில் முனைவோர்களுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.11.15 கோடியும், மானியத் தொகையாக ரூ.2.32 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
இதே போன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் இதுவரை 112 பயனாளிகளுக்கு, திட்ட மதிப்பீடாக ரூ.4.21 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.1.05 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.