மாணவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயற்சி ரெயில்வே ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
மாணவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்ற ரெயில்வே ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
பழனி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 55). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆயக்குடியில் ரெயில்வே கேட் கீப்பராக வேலை செய்தார். அப்போது அந்த பகுதியில் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அதை பார்த்த பரமேஸ்வரன் நைசாக பேசி மாணவனை தனது அறைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவனுடன் அவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.
அதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்தான். பின்னர் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர், மாணவனை மிரட்டி அனுப்பி விட்டார். ஆனால் மாணவன் வீட்டுக்கு சென்றதும் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டான். அதையடுத்து மாணவனின் பெற்றோர் தரப்பில் பழனி ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பரமேஸ்வரனுக்கு 5 ஆண்டு் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.