திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-15 14:28 GMT
இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்பட 163 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் கலெக்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களையும், ஊக்கத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பால் நிலையம் அமைக்க மானியமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1½ லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். அதை தொடர்ந்து தலைமைசெயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கான மாநாட்டில் முதல்-அமைச்சரின் முகவரி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தொடர்பான நலத்திட்டங்களுக்காக மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 2 மற்றும் 3-ம் இடங்களை பெற்றதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட கலெக்டர் விருதுகளை பெற்று கொண்டதை தொடர்ந்து கலெக்டர் அனைத்து அரசுதுறை அலுவலர்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக உதவியாளர் கவிதா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்