தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இளம்வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் பேச்சு

நாமக்கல் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் இளம்வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

Update: 2022-03-15 14:22 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் இளம்வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.
புத்தாக்க பயிற்சி
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாம் இன்று நாமக்கல்லில் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது:-
எடை குறைவாக குழந்தைகள் பிறப்பதற்கு கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொள்ளாததே முக்கிய காரணம் ஆகும். மாவட்டத்தில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறந்திட கர்ப்பிணிகள் அனைத்து வகையான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை நாம் அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.
ரத்தசோகை
நாமக்கல் மாவட்டத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற உயரமானது மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. மேலும் உயரத்திற்கேற்ற எடை இன்றியும் உள்ளனர். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் வழங்கப்படும் தாய்ப்பாலானது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குறிப்பிடத்தக்க சதவீத தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கவில்லை என்பது சுகாதார துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் உள்ளது மிகவும் முக்கிய பிரச்சினையாகும். குறிப்பாக நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை வட்டார பகுதிகளில் குழந்தைகள் அதிகளவில் ரத்தசோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு காது கேட்பது, கண்பார்வை கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவது என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று சத்தான உணவுகளை உட்கொள்கிறார்களா? என்றும், கர்ப்பிணிகள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொள்கிறார்களா? எனவும் உறுதி செய்திட வேண்டும். மேலும் அவர்களுக்கு சத்துணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இளம்வயது திருமணம்
அதுமட்டுமின்றி தங்கள் பகுதிகளில் இளம்வயது திருமணம் நடைபெறாமல் இருப்பதை தாங்கள் உறுதி செய்திட வேண்டும். 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறாமல் தடுக்க பணியாற்றிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தாமல், பெற்றோரிடம் எடுத்துக்கூறி தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை உறுதி செய்திட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சத்துணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊட்டச்சத்து எளிதில் கிடைக்கும் வகையான முருங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்ட அலுவலர் பரிமளாதேவி, நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள், துணைத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்