மூதாட்டியிடம் நகை பறிப்பு; 3 பேர் கைது

மூதாட்டியின் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்ற மர்ம கும்பலை ஒரு மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.;

Update: 2022-03-15 13:55 GMT
நகை திருட்டு

சின்ன காஞ்சீபுரம் உப்புக்குளம், ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் ராமாராவ். இவரது மனைவி பாரதலட்சுமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து விஷ்ணு காஞ்சீ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை

இந்த சம்பவம் தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தப்பி ஓடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் மர்ம கும்பல் காஞ்சீபுரத்தை அடுத்த சந்த வேலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து மர்ம கும்பலை மடக்கி பிடித்தனர். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தக்கி அலி (38), அஸ்ரதுல்லா காண்வி (32), சையது அப்பாஸ் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 பவுன் தங்க நகை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இரு சக்கர வாகனம் ஆகிவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்