வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் பாசன சங்க தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் பாசன சங்க தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-03-15 12:34 GMT
பொள்ளாச்சி

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதால் பாசன சங்க தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தினர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பேசும் போது கூறுகையில், பி.ஏ.பி. திட்டத்தில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 
இந்த நிலையில் நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக உள்ளன. இறந்தவர்கள் பெயரை நீக்கி, விடுபட்ட பெயர்களை சேர்க்க வேண்டும். மேலும் புதிதாக வாக்காளர்களை சேர்க்க வேண்டும். 


தேர்தலை நடத்த வேண்டும்

அதன்பிறகே தேர்தலை நடத்த வேண்டும். எனவே அதுவரைக்கும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆழியாறு புதிய, பழைய ஆயக்கட்டு பாசன சங்க தேர்தல் நடைபெறுகிறது. குளறுபடிகள் இருந்தாலும் தேர்தலை நடத்த வேண்டும். மேலும் குளறுபடிகள் இருப்பதால் வேட்புமனுவில் உள்ள சிறிய, சிறிய தவறுகள் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிமை சான்று, சிட்டா உள்ளது. இந்த ஆவணங்களை போதுமானதாக உள்ளதா? மேலும் முன்மொழியும் நபர்களுக்கு எந்தெந்த ஆவணங்கள் வேண்டும் என்பதை தெளிவாக கூற வேண்டும் என்றனர்.

காட்டுப்பன்றிகள் தொல்லை

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறுகையில், மார்ச்சநாயக்கன்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. அங்கு அமைப்பதை விட அம்பராம்பாளையம் சுங்கத்தில் அலுவலகத்தை அமைத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஆனைமலை பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. தனியார் நெல் அறுவடை எந்திரத்திற்கு வாடகை கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் நெல் அறுவடை எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
ஆழியாறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மட்டை விலை குறைந்து விட்டது. எனவே கொப்பதை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பொள்ளாச்சியில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்க வேண்டும். பாலாற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஆழியாறு ஒட்டக்கரடு பகுதியில் சிறுத்தை, ஆடுகளை கடித்து கொன்று உள்ளது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதை பிடிக்க வேண்டும். மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். 
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்