பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்
பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர்
பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தப்போது அவர் தாயார் பத்மாவை கவனித்து கொள்வதற்காக பரோலில் வெளியே வந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், முருகனும் தங்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். தந்தையின் முகத்தை வீடியோகால் மூலம் கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று முருகன் சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. முருகன் பரோல் மற்றும் விடுதலை வழங்கக்கோரி சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். ஆனாலும் அவருக்கு இதுவரை பரோல் மற்றும் விடுதலை வழங்கப்படவில்லை.
முருகன் உண்ணாவிரதம்
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தார். தற்போது அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதனால் விரக்தி அடைந்த முருகன் பரோல் வழங்கக்கோரி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். ஜெயிலில் வழங்கப்பட்ட காலை, மதிய உணவை சாப்பிடவில்லை. அவரிடம் ஜெயில்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காத முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அனுமதி கடிதம் அளிக்கவில்லை
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், முருகன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முறைப்படி ஜெயில் நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் எதுவும் அளிக்கவில்லை. அவர் கடிதம் கொடுத்தால் தான் உண்ணாவிரதம் இருப்பதாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
முருகன் அனுமதி கடிதம் கொடுக்காததால் ஜெயில் நிர்வாகத்தை பொறுத்தவரை அவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.