வேலூரில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
தமிழ்நாடு ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்ட மையம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காசி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நீலமோகன், சிவராமன், ஆசிரியர் இல்ல பொதுச்செயலாளர் செல்வமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ், பொதுசுகாதார அலுவலர் சங்க மாநில செயலாளர் மோகனமூர்த்தி, ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்ப பெறும் வசதிகளை தனியார் காப்பீடு நிறுவனங்கள் உடனடியாக வழங்காமல் காலம் கடத்தி வருவதை கண்டித்தும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், அலுவலர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவி செய்வதில்லை. பலர் ஓய்வு பெற்று விட்டார்கள். புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலுவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.