தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட கஞ்சா வியாபாரி கைது
தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம், சிவசண்முகம் சாலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கார் அருகே 6 பேர் பேசிக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினார்கள். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையை சேர்ந்த கணேஷ்(வயது 48) என்பதும், அவர் சொன்ன தகவல் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த செல்வமணி(24), நெல்லை மாவட்டம் மருகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன்(23) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
முருகன் மீது இரட்டை கொலை வழக்கு உள்ளது. மேலும் அவர் சொன்ன தகவல் அடிப்படையில் 6 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் சம்பந்தப்பட்ட அவருடைய கூட்டாளிகள் பிரவீன்குமார்(23), செல்வம்(20), வேல்முருகன்(20) ஆகியோரும் கைதானார்கள்.
கஞ்சா வியாபாரி முருகனிடம் விசாரித்தபோது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சட்டவிரோத தொழில் செய்யும் தொழில் அதிபர் ஒருவரை கடத்திச்சென்று பணம் பறிக்க திட்டமிட்டதாகவும், திட்டத்தை நிறைவேற்றும் முன்பு போலீசாரிடம் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார். கடத்தல் திட்ட வழக்கில் முருகனின் கூட்டாளிகள் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.