கோவை: மின் கசிவால் தீ விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு...!

கோவையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-03-15 09:28 GMT
கோவை,

கோவை துடியலூர் அடுத்த உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விஜயலட்சுமி. இவரது கணவர் ஜோதிலிங்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தியணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்புத் துறையினர், கதவை உடைத்து தீயை அணைத்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பெண்ணும், படுக்கை அறையில் அம்மாவும், இன்னொரு பெண்ணும் இறந்து கிடந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் ஹாலில் இருந்த யூ.பி.எஸ்-சில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அணைக்க முயற்சித்த போது புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய் மகள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், 2 மகள்கள், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்