பொது வழித்தட பிரச்சினையால் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
பொது வழித்தட பிரச்சினை காரணமாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
பொது வழித்தட பிரச்சினை காரணமாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்களில் மோகலட்சுமி (வயது 21), சத்யா (35), பரமேஸ்வரி (55), அலமேலு (60), மணிமேகலை (40) ஆகிய 5 பெண்கள் திடீரென தாங்கள் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
வழித்தட பிரச்சினை
இதையடுத்து அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, கடந்த ஓராண்டுக்கு மேலாக பொது வழித்தட பிரச்சினையால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். இதுதொடர்பாக போலீஸ் நிலையம் உள்பட அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே எங்களை மிரட்டும் வகையில் சந்தியாவின் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் எங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொது வழித்தட பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.