கவர்னரின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்க கூடாது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேட்டி
கவர்னரின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சேலம்:
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு காரல் மார்க்ஸ் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்தரபிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதால், இனி வரக்கூடிய அனைத்து தேர்தலிலும் வெற்றிபெறும் முகாந்திரம் உள்ளது போல் பா.ஜனதா சொல்லிக் கொண்டிருக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். தேர்தலில் ஒரு முறை வெற்றி பெற்ற கட்சி, அடுத்த முறை படுதோல்வி அடைந்த நிகழ்வுகளை எல்லாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.
நாட்டில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பா.ஜனதாவை வீழ்த்த ஒரே மேடையில் ஒன்றிணையும் நிலை உருவாகி கொண்டு வருகிறது. தமிழக கவர்னரின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை பறிப்பதாக இருக்க கூடாது. அந்த நிலை தொடர்ந்தால் கவர்னரின் பதவி தேவையா? என விவாதிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.