சேலத்தில் பயிற்சி வகுப்பு தொடக்கம்:குழந்தையை தாய் பாதுகாப்பது போன்று போலீசாரின் பணி இருக்க வேண்டும்-டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு பேச்சு
சேலத்தில் பயிற்சி வகுப்பு தொடக்கம்:குழந்தையை தாய் பாதுகாப்பது போன்று போலீசாரின் பணி இருக்க வேண்டும்-டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு பேச்சு
சேலம்:
சேலத்தில் நடந்த போலீசாருக்கான பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி.பிரவீன்குமார் அபினபு பேசும் போது, போலீசாரின் பணி என்பது, தாய், குழந்தையை பாதுகாப்பது போன்று இருக்க வேண்டும் என்றார்.
பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்துக்கு 269 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 268 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது வழக்கு உள்ளதால் அவருக்கு பணி நியமன ஆணை வழங்க வில்லை.
இதனிடையே பணி நியமனம் பெற்றவர்களில் 3 பேர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 265 பேருக்கு நேற்று குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதற்கு சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முக்கிய கடமை
தற்போது இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள நீங்கள் இதுவரை பொதுமக்களாக இருந்தீர்கள். ஆனால் இன்று (நேற்று) முதல் காவலர்கள். எனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது போலீசாரின் கடமை ஆகும். போலீசாருக்கு பாதுகாப்பு பணி என்பது பல வகை உள்ளது. தற்போது தேர்வாகி உள்ள போலீசாரின் பணி என்பது, குழந்தையை தாய் பாதுகாப்பது போன்று இருக்க வேண்டும்.
அதன்படி பொதுமக்கள் பயமின்றி வாழும் அளவில் போலீசாரின் பணி இருக்க வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களின் பிரச்சினை தீர்த்து வைத்து அவர்களை அனுப்பி வைப்பது மிக முக்கிய கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.