மேகதாது அணைக்காக கர்நாடகாவில் பாதயாத்திரை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?-அண்ணாமலை கேள்வி

மேகதாது அணைக்காக கர்நாடகாவில் பாதயாத்திரை நடத்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update: 2022-03-14 22:08 GMT
அயோத்தியாப்பட்டணம்:
மேகதாது அணைக்காக கர்நாடகாவில் பாதயாத்திரை நடத்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மேகதாது அணைக்காக கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவக்குமார், சித்தராமையா உள்பட காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன குரல் எழுப்பவில்லை. கூட்டணியில் இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்கவில்லை ஏன்? இதைத்தாண்டி, தமிழக உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டார். 
ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் ஹேமாவதி, கபினி அணை போன்றவை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் உரிமையை விட்டுக்கொடுத்து, கட்டப்பட்டது. தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருக்கும்போது, மேகதாது அணையை விட்டுக்கொடுக்கிறார். இதுமட்டுமின்றி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையின் உரிமையையும் விட்டுக்கொடுத்துள்ளனர். அதற்காக, பா.ஜனதா கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணியில் மட்டும் இருந்து, தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்து வருகின்றனர். விடியல் அரசாங்கத்தை தாண்டி, இந்த அரசுக்கு மக்கள் கொடுத்துள்ள பெயர் "அறிவிப்பு அரசாங்கம்". மத்திய அரசு அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் மாற்றி, மாநில அரசு அறிவித்தது போல் விளம்பரம் செய்கின்றனர். 
இதற்கு முன்பு, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை எடுத்துவிட்டு இவர்கள் செய்தது போல் வேறுபடம் வைத்துக் கொள்கின்றனர். இது இந்த அரசுக்கு வாடிக்கையாக உள்ளது. இதுபோன்று எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 
நடவடிக்கை
தி.மு.க.வினர் தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். செயலில் ஒன்றும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை கையை கட்டிப்போட்டுவிட்டு, மாவட்ட செயலாளர்கள் போலீஸ் நிலையங்களை செயல்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. 
தினமும் தி.மு.க. மற்றும் முதல்-அமைச்சர் குறித்து தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவிடுபவர்களை கைது செய்ய சொல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களை துன்புறுத்த கூடிய கொடியவர்களை ஏன் கைது செய்ய சொல்லவில்லை?.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

மேலும் செய்திகள்