பெங்களூருவில் சாலை பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு
பெங்களூருவில் சாலை பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு:
சாலைகளில் பள்ளங்கள்
பெங்களூரு நகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பெரும்பாலான சாலைகளில் இருக்கும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களில் விழுந்து 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். இதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரி மீது போக்குவரத்து போலீசார் வழக்கும் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், பெங்களூரு சாலை பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.
தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வின்(வயது 27). இவர், பெங்களூரு வடடேரஹள்ளியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எலகங்கா அருகே எம்.எஸ்.பாளையா, முனேஷ்வரா லே-அவுட் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த பள்ளத்தை கவனிக்காமல் அஸ்வின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது. இதனால் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கிய போது கவிழ்ந்தது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அஸ்வின் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் அஸ்வின் இறந்துவிட்டார். அஸ்வின் சாவுக்கு சாலை பள்ளமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரியம் மீது...
இதற்கிடையில், விபத்து நடந்த பகுதிக்கு நேற்று காலையில் சென்று மாநகராட்சி அதிகாரிகள் பாா்வையிட்டனர். அப்போது அங்கு பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் உண்டான பள்ளம் காரணமாக விபத்து ஏற்பட்டு அஸ்வின் பலியானது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பள்ளத்தை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தார்கள். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கமிஷனர் கவுரவ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நிருபா்களிடம் கூறுகையில், ‘‘பெங்களூருவில் சாலை பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியானது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்திற்கு காரணமான குடிநீர் வடிகால் வாரியம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும்’’, என்றார்.