புகார் பெட்டி
அறிவிப்பு பலகை சரி செய்யப்படுமா?
அந்தியூர் அருகே செல்லம்பாளையம் மாதிரி பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை உள்ளது. இதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு பலகையானது ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இல்லாமல் வேறு திசையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது குறித்த அறிவிப்பு தொிவதில்லை. எனவே அறிவிப்பு பலகையை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்.
மோசமான சாலை
ஈரோடு கச்சேரி வீதி பெரியார் மன்றத்தில் இருந்து காரை வாய்க்கால் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோவில்களின் திருவிழா விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுவார்கள். எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மா, கச்சேரி வீதி.
வீணாக செல்லும் குடிநீர்
ஈரோடு மணிக்கூண்டு அருகே கிழக்கு அனுமந்தராயன் வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தெருவில் வீணாக செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, ஈரோடு.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
ஈரோடு மூலப்பாளையம் விக்னேஷ்நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து வாய்க்கால்மேடு வரை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் கிடையாது. நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் கரையோரமாக இந்த சாலை செல்வதால் இரவு நேரங்களில் வாய்க்கால் கரையோரமாக அமர்ந்து பலரும் மது அருந்துகிறார்கள். மேலும், இரவில் இருட்டாக இருப்பதால் பெண்கள் அந்த வழியாக செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெரு விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயத்திரி, விக்னேஷ்நகர்.
மதுபிரியர்களின் அட்டூழியம்
ஈரோடு பஸ் நிலையத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 7 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மினி பஸ்கள் நிறுத்துமிடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால், அங்கு அமர்ந்து சிலர் மது அருந்துகிறார்கள். மேலும், டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு வெளியே வருபவர்கள் குடிபோதையில் மினி பஸ்கள் நிறுத்துமிடத்தில் படுத்து தூங்குகின்றனர். இதன் காரணமாக பயணிகள் பெரிதுமு் சிரமப்படுகிறார்கள். மதுபிரியர்களின் அட்டூழியத்தால் பெண் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க முடியாத நிலை உள்ளது. எனவே மினி பஸ்கள் நிறுத்துமிடத்தில் படுத்து தூங்குபவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
சாந்தி, ஈரோடு.
முட்புதரில் குப்பை தொட்டி
டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி குட்டையூர் சாலையோர முட்புதரில் குப்பை தொட்டி ஒன்று கிடக்கிறது. முட்புதரில் கிடப்பதால் இந்த குப்பை தொட்டியை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கீழே கொட்டிவிட்டு செல்கிறார்கள். எனவே தேவைப்படும் இடத்தில் அந்த குப்பை தொட்டியை வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொண்டையம்பாளையம்.
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்
பவானி அருகே குட்டிபாளையம் இந்திரா காலனியில் சுமார் 60 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்ல வழியில்லாததால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்காமல் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தசாமி, குட்டிபாளையம்.