விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி இன்று நடக்கிறது; இஸ்ரோ தகவல்
விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க உள்ள கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
பெங்களூரு:
கல்வி நிறுவனங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோ அதிகாரி ஒருவர், கல்வித்துறைக்கு விண்வெளி ஆராய்ச்சி வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
'ரெஸ்பாண்டு' திட்டத்தின் கீழ் கல்வித்துறைக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் சேர பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இதில் பல்கலைக்கழகங்கள்-கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியை நாளை(இன்று) மேற்கொள்கிறோம். இதில் தேர்வாகும் கல்வி நிறுவனங்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி குறித்த தேவையான உதவிகளை இஸ்ரோ வழங்கும்.
ஆராய்ச்சி திறன்
அதாவது நிதி, தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கைகோள் வடிவமைப்பு குறித்த உதவிகள் செய்யப்படும். இந்த திட்டத்தின் நோக்கமே, கல்வி நிறுவனங்களை விண்வெளி திட்டங்களில் பங்கேற்க செய்வதும், அவற்றுக்கு பங்களிப்பு வழங்க செய்வதுமே ஆகும். இதன் மூலம் கல்வி நிலையங்கள் விண்வெளி திட்ட பணிகளில் ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விண்வெளி குறித்த விஷயங்களை கற்று கொடுக்க இஸ்ரோவின் பெரிய திட்டங்களின்படி ஒரு விரிவான ஆராய்ச்சி-வளர்ச்சி மற்றும் அதுகுறித்த தலைப்புகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பகின்றன. இந்த ‘ரெஸ்பாண்டு' திட்டத்தால் இஸ்ரோ மற்றும் அதில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள் என இருதரப்பும் பயன் பெறுகின்றன. இந்த திட்டத்தால் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி திறன் கொண்டவர்களின் திறன் நாட்டின் விண்வெளி திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.