காரியாபட்டி,
திருச்சுழி அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் (சத்திரம் காலனி) கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி மாரி (வயது 60). இவர் எம்.புளியங்குளம் பகுதியிலுள்ள கடைக்கு சென்று விட்டு மாரியும், அவரது மருமகனான சண்முகம் (25) என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சுழி - நரிக்குடி சாலை எம்.புளியங்குளம் பயணிகள் நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையத்திலிருந்து பரமக்குடி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாரியும், சண்முகமும் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தனர். இதில் மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சண்முகமும், பயணிகள் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த குரு (55) என்பவரும் காயமடைந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றும் சேதமானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.